திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றித்ததிற்கு உட்பட்ட ஏலாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு கொல்லை கிராமத்தில், கடந்த ஆண்டு கட்டப்பட்ட சக்தி மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் 31ஆம் தேதி பந்தக்கால் நடவு செய்யப்பட்டு 11 நாட்கள் தொடர்ச்சியாக திருவிழா நடைபெற்றது. அதற்காக, பக்தர்கள் பலர் காப்பு கட்டி விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தனர். இந்த நிலையில், நிறைவு நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அப்போது, காட்டு கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மோனிஷ் (7) என்பவர் தீக்குழி இறங்கினார். அப்போது, நிலை தடுமாறிய சிறுவன் தீக்குழியில் தவறி விழுந்துள்ளார். அதனை அடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உடனடியாக சிறுவனை மீட்டனர்.
பின்னர், சிறுவன் சென்னை கேஎம்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சிறுவன் 40 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்ததாகக் கூறிய மருத்துவர்கள், சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இரு குடும்பத்தினரிடையே குடுமிபிடி சண்டை.. ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அடித்துக் கொள்ளும் வீடியோ வைரல்!