சென்னை: 44 வயதான பெண்ணிற்கு இருந்த இன்சுலர் மூளைக் கட்டியை, கண் புருவத்திற்கு மேல் பகுதியில் சிறிய துளையிட்டு ஐப்ரோ கீஹோல் அணுகுமுறை மூலம் அப்போலோ கேன்சர் மருத்துவர்கள் கட்டியை அகற்றி உள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை முறையின் மூலம் நரம்பியல் புற்றுநோய் துறையில் ஆழமான மூளைக் கட்டிகளை அகற்றுவதற்கு இது மற்றொரு சிகிச்சை முறையை வழங்குவதுடன், நோயாளியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, "44 வயதுடைய பெண் ஒருவரது மூளையில் டாமினன்ட் பக்க இன்சுலர் மடலின் மெல்லிய மடிப்புகளுக்குள் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டபோது, மூளையின் முக்கியப் பகுதியான இன்சுலா எனப்படும் சிக்கலான பகுதியில் இருப்பது தெரிந்தது. செரிப்ரல் கார்டெக்ஸுக்குள் ஆழமாக பொதிந்துள்ள இன்சுலா, அறுவை சிகிச்சை சவால்கள் நிறைந்தது. பேச்சு மற்றும் உடலின் இயக்கம் போன்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய பகுதிகளால் சூழப்பட்டுள்ள பகுதி இன்சுலா.
இரத்த நாளங்களின் அடர்த்தியான வலைப் பிணைய அமைப்பால் அடுக்குகளாக அமைந்துள்ளது. பாரம்பரிய அறுவை சிகிச்சை அணுகுமுறைகளில், பக்கவாதம், மொழிக் குறைபாடு போன்ற ஆபத்துகளில் ஆழ்த்தக்கூடிய, முக்கியமான மூளை திசு மற்றும் ரத்த நாளங்கள் வழியாக அணுக வேண்டியிருக்கும்.
நோயாளியின் நலனை கருத்தில் கொண்டு வழக்கமான அறுவை சிகிச்சை முறையிலிருந்து மாற்றி, மண்டை ஓட்டின் அடித்தள சிதைவுகளுக்கான கீஹோல் அறுவை சிகிச்சைகளில் ஏற்கனவே செய்த அனுபவத்தின் மூலம், இந்த அறுவை சிகிச்சையை செய்ய திட்டமிட்டனர்.
கண் புருவத்தில் சிறிய கீறல் மூலம் இன்சுலாவை எட்டும் இந்த புதிய கீஹோல் அணுகுமுறையில் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை செய்து முடித்தாேம். நோயாளியும் அன்றே கண் விழித்து பாரத்ததுடன், 3 நாட்களில் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.
ஆனாலும் அவருக்கு புற்றுநோய் கட்டியா என்பதை ஆய்வு செய்து, நிலை 2-இல் இருந்ததால், ஹீமோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரையில் யாருக்கு மூளையில் கட்டி வந்தாலும் அகற்ற முடியும். அதனைக் கண்டு பயப்பட0த் தேவையில்லை.
நோயாளிக்கு ஸ்கேன் செய்யும் போதே அவரின் மூளையின் செயல்பாடுகளையும் சேர்த்து பரிசோதிக்கிறோம். இதனால் கட்டியை அகற்றும் போது எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது” எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து புற்றுநோயை வென்றவர் கூறுகையில், "எனது அறுவை சிகிச்சையை குறைந்த சவால் கொண்டதாக மாற்றியதற்காகவும், விரைவாகக் குணமடைவதை உறுதி செய்ததற்காகவும் மருத்துவர்களுக்கு நன்றியை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிகிச்சை முறை என்னை குணப்படுத்தியது மட்டுமல்லாமல், எனக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் கொடுத்து இயல்பு நிலைக்கு திரும்பச் செய்துள்ளது. பயம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். தனக்கு அறுவை சிகிச்சை செய்து 50 நாட்கள் கடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏஐ குரல் என்னுடையது? அமெரிக்க நடிகை அதிருப்தி.. ஸ்கை வாய்ஸை நிறுத்திய ஓபன் ஏஐ!