திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த பூவனூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் கிணறு அமைக்கலாம் என முடிவு செய்துள்ளார். இதற்காக போர்வெல் அமைக்கும் இயந்திரத்தை வரவைத்து கிணறு அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
இந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, சுமார் நான்கு அடிக்குக் கீழ் போர்வெல் இயந்திரத்தில், இரும்பு பட்டது போன்ற சத்தம் வந்துள்ளது. இதனையடுத்து போர்வெல் இயந்திரத்தை நிறுத்திய விவசாயி சண்முகம் அருகில் உள்ள வேலை ஆட்களை அழைத்துத் தோண்டி பார்த்துள்ளார். அப்போது பழங்கால சாமி சிலைகள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து நீடாமங்கலம் காவல்துறையினருக்கும், வட்டாட்சியர் தேவேந்திரனுக்கும், சண்முகம் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிலையைப் பார்வையிட்டனர். அதில் அம்மன், நடராஜர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர் விநாயகர் உள்ளிட்ட 8 உலோக சிலைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட சிறிய சாமி சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு பல கோடி இருக்கும் எனவும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து விவசாயி சண்முகம் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிலைகள், வட்டாட்சியர் அலுவலகம் எடுத்துச் செல்லப்பட்டு அங்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வேறு ஏதேனும் சிலைகள் உள்ளதா எனத் தோண்டி பார்க்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னரே சிலைகள் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் அதன் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த முழுமையான தகவல் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்த பிறகு சிலைகள் அனைத்து அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என வட்டாட்சியர் தேவேந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே போர்வெல் கிணறு தோண்டும் பொழுது கிடைத்த பழமையான சிலைகளைப் பாதுகாப்பாக வட்டாட்சியரிடம் ஒப்படைத்த விவசாயி சண்முகத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; பணியில் அலட்சியம்..வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்