சென்னை: அந்தமானை சேர்ந்த 51 வயது பெண்ணிற்கு அந்தமான் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது செலுத்தப்பட்ட மயக்க மருந்து பாதிப்பால் அப்பெண் கோமா நிலைக்கு சென்றதும், இதற்கு முக்கிய காரணமாக பெண்ணின் தலையில் கட்டி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தமானில் இருந்து அப்பெண் உடனடியாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நரம்பியல் மருத்துவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில், பெண்ணின் அடிப்பகுதியில் இருந்த கட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோமா நிலையில் இருந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் இயக்குனர் ரூபேஷ் குமார் தலைமையில் இயங்கிய மருத்துவர்கள் ஹரீஷ்சந்திரா மற்றும் சரண்யன், நரம்பியல் சார்ந்த மயக்க மருந்தியல் நிபுணர் அருள்செல்வன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட எம்ஜிஎம் ஹெல்த்கேர் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் இயக்குனர் ரூபேஷ் குமார் ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், அந்தமானில் 51 வயது பெண் ஒருவருக்கு கர்ப்பப் பையை நீக்கும் அறுவைசிகிச்சை வெற்றியடைந்தது. முதுகுத்தண்டில் செலுத்தப்பட்ட மயக்க மருந்தை தொடர்ந்து, மூளையில் திரவ இயங்கியலில் ஏற்பட்ட மாற்றமானது, மூளையின் அழுத்தத்தில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தியது.
அறுவை சிகிச்சையால் கோமா நிலை?: இதனால் கோமா நிலை ஏற்பட்டது. மயக்க மருந்து செலுத்துவதற்காக முதுகு தண்டுவடத்தில் போடப்படும் ஊசி துளையில் கசிவு வரும், எனவே அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர்களை எழுந்து நடக்க வேண்டாம் என கூறுவோம். கர்ப்பப்பை அகற்றல் அறுவைசிகிச்சை செய்ததிலிருந்து 2 நாட்களுக்குள் இந்த பெண் அதிக களைப்படைந்ததுடன், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்தமானிலிருந்த மருத்துவர்கள் செய்த மூளை ஸ்கேன் பரிசோதனையில், அப்பெண்ணின் மண்டையோட்டிற்குள் பெரிய கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால், உடனடியாக அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இங்கு வந்து சேர்ந்தவுடன் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரே வாய்ப்பாக கருதப்பட்ட அவசரநிலை மூளைக்கட்டி அகற்றல் அறுவைசிகிச்சையை செய்ய முடிவு செய்தோம். மூளையின் வலதுபுறத்தில் முக்கிய இரத்த நாளங்கள் இருக்கும் பகுதியில் கண்டறியப்பட்ட 8 செ.மீ. அளவுள்ள கட்டியினை அகற்ற , கட்டியைச் சுற்றியிருந்த ரத்தநாளங்களுக்கு பாதிப்பில்லாமல், அவற்றை தக்கவைக்கும் விதத்தில் இந்த அறுவைசிகிச்சை 6 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது.
மூளை கட்டி பாதிப்பு: மூளைக்கட்டியை துல்லியமாக அணுகி அதனை ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்படாமல் முழுமையாக அகற்றினோம். பெரிய திரவத் தேக்கத்தின் காரணமாக, இந்நோயாளியின் மூளையின் வலது பகுதி வீங்கிய நிலையில், இடதுபுறம் நோக்கி அழுத்தி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது.
உரிய நேரத்திற்குள் இம்மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டதனால், அவரது உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கிறது. நோயாளிக்கு மூளையில் கட்டி இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. முன்கூட்டியே தெரிந்திருந்தால் மூளையின் கட்டியை அகற்றிவிட்டு அதன் பின்னர் கர்ப்பை அறுவை சிகிச்சையை செய்திருப்பார்கள்.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு 5வது நாளன்று, நோயாளி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவருக்கு தலையில் இருந்தது சதாரண கட்டி என்பதையும் உறுதி செய்துள்ளோம். ஒருவருக்கு தலைவலி இருந்தால் அது குறித்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மூளையில் கட்டி இருந்தால் அதன் மூலம் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.