தூத்துக்குடி: விளாத்திகுளம், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், சோலையம்மாள் தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த 2 குழந்தைகளுக்கும் நேற்று முந்தினம் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காதணி விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் சிலர் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வேம்பார் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள கடலின் முகத்துவாரத்தில் சதீஷ்குமார் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 வயது சிறுமி சாதனா கடலில் மூழ்கியுள்ளார். அப்போது சிறுமியை காப்பாற்ற முயன்ற சிறுமியின் உறவினர் டேனி என்ற 25 வயது இளைஞரும் கடல் அலையில் சிக்கி மூழ்கியுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த கடலோர வேம்பார் காவல் படை போலீசார் உடனடியாக அங்கு சென்று 5 வயது சிறுமி சாதனா மற்றும் அவரது உறவினர் டேனியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கடலோரக் காவல் படை போலீசார் முதலில் டேனியின் உடலை இறந்த நிலையில் மீட்டனர்.
இதனைதொடர்ந்து சிறுமி சாதனாவின் உடலையும் இறந்த நிலையில் கண்டெடுத்தனர். இதைத்தொடர்ந்து இருவரின் உடல்களையும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக வேம்பார் கடலோரக் காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.