சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாகவே மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுற்ற நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து 1 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.12ஆம் தேதிக்குள் தேர்வு நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்கக் கோரி சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
அதனடிப்படையில் தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி,அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருந்த 'அறிவியல் தேர்வு' ஏப்ரல் 22 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதே போல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த 'சமூக அறிவியல் தேர்வு' ஏப்ரல் 23ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பணியில் இருந்து யாரெல்லாம் விலக்கு பெறலாம்? - முழு விவரம்! - Election Duty Staff Exemptions