கரூர்: கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர், ரவுடியுமான கருப்பத்தூர் கோபால் என்கின்ற கோபாலகிருஷ்ணன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால், கடந்த 2021 அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து, லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 பிரிவு தனிப்படைகள் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்குத் தொடர்பாகத் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், உறுதுணையாக இருந்த கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா(36), சரவணன்(31), ஜெயராமன் கம்மநல்லூர் சுரேஷ்(38), நந்தகுமார்(35), கருப்பு குமார் உள்ளிட்ட 11 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், உடல் நலக்குறைவு காரணமாகக் கருப்பு ரவி தவிர பத்து நபர்களைக் கைது செய்யப்பட்டு, வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று (பிப்.15) பிற்பகல் 1 மணியளவில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.
அதில் முக்கிய குற்றவாளிகளான, கருப்பத்தூர் பகுதியை கருப்பத்தூர் ராஜா(36), வயலூர் சரவணன்(31), சுந்தர்(36), ரவி(26) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேபோல் கம்மநல்லூர் சுரேஷ்(35), நந்தகுமார்(32) ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், கரூரில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளராகவும் பிரபல ரவுடியாகவும் இருந்த கருப்பத்தூர் கோபால் கொலை வழக்கில், நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை அடுத்து, திருச்சி மத்தியச் சிறையில் குற்றவாளிகள் அனைவரும் துப்பாக்கி ஏந்திய, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றைச் சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!