தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிபட்டினம் எனும் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி (26) என்பவர், மதன் (30) என்பவரால் இன்று பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் படுகொலை நிகழ்ந்த பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "இதுபோல நடக்க கூடாத சம்பவம் நடந்து விட்டது.
வேதனைக்குரிய நாளாக இன்றைய நாள் அமைந்துவிட்டது. தற்காலிக ஆசிரியர் என்றாலும் இவரும் எங்கள் ஆசிரியர்தான். இது ஒரு எதிர்பாராத வித சம்பவம் சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பள்ளி வளாகத்திற்குள் வந்து செய்தது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இது போன்ற செயல் செய்யக்கூடாது.
இதையும் படிங்க: தஞ்சை ஆசிரியை கொலை: பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்!
மற்ற ஆசிரியர்கள் கொலை செய்தவனை உடனே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இனி காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொள்வார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தான் வைக்கும் வேண்டுகோள், இதுபோல காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு யாரும் தயவு செய்து வாதாட வேண்டாம்.
இந்த மாதிரி செயல்களை ஈடுபடுபவர்கள் தண்டனைக்கு உரியவர்கள். இவருக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது நீதிமன்றத்திற்கு வரும்பொழுது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு ஒரு மனிதநேயத்தை காக்கக்கூடியதாக இருந்திட வேண்டும். இந்த செயலின் மூலம் மாணவர்களுக்கு ஒரு அச்சம் வரும்.
மீண்டும் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது அச்ச உணர்வு இருக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு பொதுவான இடத்தில் வைத்து வரும் திங்கட்கிழமை கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது" என தெரிவித்தார்.
முன்னதாக உயிரிழந்த ஆசிரியை ரமணியின் உடலுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்பி முரசொலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் லிட்டர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்