விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளத்தில் அகழாய்வு பணிக்காக தொல்லியல் மேடு என்ற உச்சிமேடு என பெயரிடப்பட்ட 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு முதல்கட்ட அகழாய்வு பணி நடந்தது. அதில் 2 ஏக்கரில் 16 குழிகளில் 3,254 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
அடுத்ததாக 2023 ஏப்ரல் 6ல் நடந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் 3 ஏக்கரில் 18 குழிகள் தோண்டப்பட்டு 4660 பொருட்கள் குறிப்பாக தங்கம், சுடுமண் பொம்மைகள், பாசிமணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த மூன்றாம் கட்ட அகழாய்விலும் மேலும் பல பொருட்கள் கிடைக்கும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம்!