சென்னை: பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் இன்று அதிகாலை 5 மணிக்கு பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், உதவி ஆணையாளர் கிறிஸ்டின் ஜெயசில், பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் சண்முகம், செம்மஞ்சேரி ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸ் உட்பட 4 ஆய்வாளர்கள், 21 உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் உள்ளிட்ட 256 காவலர்கள் என சுமார் 300 பேர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கிரிக்கெட் மைதானத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு! திண்டிவனம் அருகே சோகம்
சோதனைக்கு வந்த போலீசார், பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்களின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 20 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் 1,400 குடியிருப்புகளில் அதிரடியாக போலீசார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோதனையின் ஈடுபட்ட போலீசார் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், ஆடைகள், பைகள் என மூலைமுடுக்கெல்லாம் விடாமல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 கத்தி, கஞ்சா, குட்கா பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.