அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழே சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு மாணவர் என 9 பேர் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளனர்.
திரும்பி சென்னை நோக்கிச் செல்லும் போது அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது பச்சையப்பன் என்ற மாணவர் ஆற்றின் சூழலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் அவரை காப்பாற்ற மற்ற இளைஞர்கள் முயன்றுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு இருந்த பொதுமக்கள் 6 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள 3 பேர் மாயமான நிலையில் இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில், ஆற்றில் மாயமான இளைஞர்கள் சந்தானம், பச்சையப்பன் மற்றும் தீனதயாளன் என்பதும் இவர்கள் மூவரில் இருவர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மாயமான இளைஞர்களைப் பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் அரியலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொழிற்சாலைக் கழிவுகளால் நுரை பொங்கி ஓடும் பாலாறு.. விவசாயிகள் வேதனை!