கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம், பாஜக – திமுக இடையிலான போர்க்களமாக மாறிவிட்டதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள், வெறும் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல. அவர்கள் இந்தியா மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகள்.
-
2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் பாஜக - திமுக இடையிலான போர்க்களமாக மாறிவிட்டது.
— Vanathi Srinivasan ( Modi Ka Parivar) (@VanathiBJP) March 22, 2024
பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதியானதால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பதற்றம் தெரிகிறது pic.twitter.com/KwwJycCHYL
மதச்சார்பின்மை கொள்கைக்கும், பன்முகத்தன்மைக்கும் எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள். அதோடு, கூட்டாட்சி கருத்தியலுக்கும் அவர்கள் எதிரிகளே. மொத்தத்தில் மனிதகுலத்தின் எதிரிகள் என திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியா கூட்டணிக்கு (INDIA Alliance) கச்சிதமாக பொருந்தும் வாசகங்களை எல்லாம், பாஜகவை நோக்கி முதலமைச்சர் கூறியிருக்கிறார். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக எதற்கெடுத்தாலும் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
1975ஆம் ஆண்டு ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு, நெருக்கடி நிலையை அறிவித்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் சிறையில் அடைத்து விட்டு நாடாளுமன்றத்தைக் கூட்டினார். அதையடுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை செய்தார். மதச்சார்பின்மை என்ற வார்த்தை, நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அப்படித்தான் சேர்க்கப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கி, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியது காங்கிரஸ் கட்சி தான். அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பாஜகவை நோக்கி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரி என்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படுவதையே முழுநேர தொழிலாக, மதச்சார்பின்மை என்ற பெயரில் திமுக செய்து வருகிறது.
அனைத்து மத பண்டிகைகளுக்கும் தவறாமல் வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறாமல் புறக்கணிக்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது இப்படி வெறுப்பை கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்முகத்தன்மைக்கு பாஜக எதிரி எனக் கூறுகிறார். இது தனக்குதானே கூறிக் கொள்ள வேண்டிய ஒன்று.
கூட்டாட்சி, ஆளுநர் பதவி பற்றியெல்லாம், 15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் அங்கம் வகித்தபோது திமுகவுக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது, ஆளுநர் துணையோடு தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்து வந்தது. அப்படிப்பட்ட திமுக இன்று கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில், மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் என்ன செய்தது என்பதை நாட்டு மக்கள் அறிவர். பத்தாண்டுகால மோடி ஆட்சியில், சிறுபான்மையினர் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. எனவே, முதலமைச்சர் ஸ்டாலினின் பொய், புரட்டு தமிழக மக்களிடம் எடுபடாது.
பாஜக கூட்டணிக்கே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தல் களம், பாஜக – திமுக கூட்டணி இடையிலான போர்க்களமாக மாறி உள்ளது. அதில் வெற்றியானது பாஜக கூட்டணிக்கு தான் என்பது உறுதியாகி உள்ளது. அந்த பதற்றத்தில்தான், முதலமைச்சர் ஸ்டாலின் ஏதேதோ பேசிக் வருகிறார். இனி பதற்றம் வேண்டாம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. மக்கள் இனி பிரதமர் நரேந்திர மோடி பக்கமே" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. புதிய முகங்களை களமிறக்கிய ராமதாஸ்! - PMK Candidate List