விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகள் தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இரு சிறுமிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
சிறுமியின் தாயார் 2019-ஆம் ஆண்டு பிரம்மதேசம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார், அருண், மகேஷ், ரமேஷ், துரைராஜ், மோகன், செல்வம், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வம், சேகர் ஆகிய 15 நபர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள், பள்ளியில் சோர்வாகக் காணப்பட்ட பொழுது பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உறவு முறை கொண்ட 15 நபர்கள், இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையானது விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது இரண்டு சிறுமிகளில், ஒன்பது வயது உடைய சிறுமி கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 15 நபர்களும் சிறுமிக்கு நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா தீர்ப்பளித்தார். அதில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 15 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.32 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர், 15 பேரையும் பாதுகாப்பாக அழைத்துச்சென்ற போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தீவிர விசாரணை!