சென்னை: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகன் குமார். 25 வயதுடைய இவர் சென்னை ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், ரோகன் குமார் நேற்று (ஏப்.13) இரவு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் ரோகன் குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். ஆனால் துப்பாக்கிக் குண்டு ரோகன் குமார் மீது படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டுக் கொண்டு அந்த இரண்டு மர்ம நபர்களையும் துரத்தி உள்ளனர்.
இதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ரித்திக் குமார் என்பவரைப் பொதுமக்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் பிடித்துள்ளனர். மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து ரித்திக் குமாரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரித்திக் குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் தப்பி ஓடிய மற்றொரு நபரும் அதே உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் அமித் குமார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் அமித் குமார் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் வைத்துச் சிக்கி உள்ளார்.
பின்னர், இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாகவும், அவருடன் படிக்கும் ரோகன் குமார் நட்பாகப் பழகி வந்ததாகவும் தெரிய வந்தது. இதை அறிந்த அந்த பெண்ணின் முன்னாள் காதலனான அமித் குமார் சொல்போனில் ரோகன் குமாரை மிரட்டி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த நிலையில் தான் நண்பர் ரித்திக் குமாருடன் சேர்ந்து ரோகன் குமாரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி செய்தாக கூறியுள்ளனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இவர்களுக்குத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்து என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! - MK STALIN