ராணிப்பேட்டை: ரத்தனகிரி அடுத்த டி.சி.குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சத்யா (43) - வெண்ணிலா (40) தம்பதியினர். சத்யா ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியருக்கு அர்ஷன் (14) மற்றும் பரத் (12) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சத்யா தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு, பக்கத்து கிராமமான நத்தம் பகுதியில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலுக்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு, மலை மீது அமைந்துள்ள மூங்கில் வாழி அம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மலை அடிவாரத்தில் இருந்து நடைபயணமாக சென்றுள்ளனர்.
அப்போது அதிகப்படியான வெயிலின் காரணமாக நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். உடனடியாக, சத்யா குடும்பத்தினர் மயங்கி விழுந்த அர்ஷனை தூக்கிக்கொண்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த அர்ஷனை சோதனை செய்த மருத்துவர்கள், அர்ஷன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினகிரி காவல்துறையினருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர்.
இது தொடர்பாக, தனியார் மருத்துவமனை தரப்பில், “சத்யா தனது மூத்த மகன் அர்ஷன் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சம்பவ இடத்தில் முனீஸ்வரன் பூஜைக்கு சென்றுள்ளார்கள். சம்பவ நேரத்தில் அர்ஷனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே டோலி கட்டி அர்ஷனை மேலகுப்பம் ஆலங்குளம் மலை அடிவாரத்திற்கு தூக்கிகொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், அர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தற்போது அர்ஷனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்” என தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கத்தால் ராணிப்பேட்டையில் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.