விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயலு (வயது 54) சைக்கிளில் ஊர் ஊராக சென்று மிளகாய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு குப்பம்மாள் என்ற மனைவியும், சுகந்தி, சுகுணா, சுபி, அபி, அனிதா என ஐந்து மகள்களும் உள்ளனர். இதில் அனிதா சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பொது தேர்வுகள் துவங்கிய நிலையில், தமிழ் தேர்வை எழுதிவிட்டு ஆங்கில தேர்வுக்காக அனிதா படித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மிளகாய் வியாபாரம் செய்வதற்காக சென்றிருந்த சுப்பராயலு சிறுத்தனூரில் சாலையை கடக்கும் போது, சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தை உயிரிழந்து, வீட்டில் சடலமாக கிடத்தப்பட்டிருந்த நிலையிலும், சிறுமி அனிதாவை தேர்வு எழுதுமாறு அவரது தாயார், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதை ஏற்று, கண்ணீர் மல்க நேற்று (மார்ச் 5) பள்ளிக்கு சென்று, ஆங்கிலத் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய அனிதா, சடலமாக கிடத்தப்பட்டிருந்த தந்தையை கட்டியணைத்து கதறி அழுதது அங்கு இருந்த கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து மாணவி அனிதா கூறும் போது, “என் தந்தை சைக்கிள் மூலம் மிளகாய் வியாபாரம் செய்து எங்கள் ஐந்து பேரையும் படிக்க வைத்து வந்தார். எனது அம்மா கூலி வேலை செய்து வருகின்றார். நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். எனது 4வது மூத்த சகோதரி கல்லூரியில் பயின்று வருகிறார். என்னை போலீஸுக்கு படிக்க வைப்பதாக எனது தந்தை கூறி வந்தார். அவர் இறந்து விட்டதால் தற்போது எங்களையும், எங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கு ஆள் இல்லை.
எனது படிப்பு, எனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நான் படித்து போலீஸ் ஆக வரவேண்டும் என என் தந்தை கூறி வந்த நிலையில் என் தந்தை இறந்து விட்டார். எங்களுக்கு தமிழக முதலமைச்சர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உதவி செய்தால் நிச்சயம் என் தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!