சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும், 4,107 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 ஆயிரத்து 616 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 827 பேரும் எழுத உள்ளனர். சிறைவாசிகள் 235 பேரும் தேர்வினை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக 304 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை உறுப்பினர்கள் 3,350 பேரும், நிலையான பறக்கும் படை 1,214 பேரும், தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் 48 ஆயிரத்து 700 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 810 பள்ளிகளில் படிக்கும் 66 ஆயிரத்து 771 மாணவர்கள், 288 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்கும் பணியில், முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 323 பேரும், துறை அலுவலர்கள் 330 பேரும், அறைக் கண்காணிப்பாளர்கள் 3,400 பேரும், பறக்கும் படையில் 668 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கட்டாயம் தமிழ் பாடத்தேர்வினை எழுதுவதில் இருந்து சிறுபான்மை மாெழி மாணவர்களில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி புழல் சிறையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விதிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள், தங்களுடன் செல்போன் கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும், தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் உள்பட இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வர்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, தேர்வு நடைபெறும் நாட்களில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் 9498383076, 9498383075 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்வதற்காக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு! - Today Tamil Nadu Weather Report