சென்னை: சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த இரண்டு சிறுவர்களுக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு 3 இளைஞர்கள் பாலியல் ரீதியாக சீண்டல் அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயார்கள் புகார் அளித்துள்ளனர். சிறுவர்களின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவர்களுக்கு பாலியல் சீண்டல் அளித்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கானது, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, "மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு தலா பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலால் ரெட் அலர்ட் எச்சரிக்கை.. மக்கள் செய்ய வேண்டியது என்ன?