ஹராரே: சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று (ஜூலை 6) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் விளையாடியது. டியான் மையர்ஸ், கிளைவ் மதாந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவிற்கு ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 116 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா - சுப்மன் கில் ஜோடி களமிறங்க, வந்த வேகத்தில் அபிஷேக் அவுட் ஆக ருதுராஜ் கெய்க்வாட் களம் கண்டார். ஆனால், அவரும் நீடிக்கவில்லை. சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சரியாக விளையாடமால் தங்களது விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி திணறியது. 5 ஓவர் முடிவிற்கு 22-4 என்ற கணக்கில் விளையாடியது. களத்தில் துருவ் ஜுரல் - சுப்மன் கில் ஜோடி இருந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினர். 10 ஓவர் முடிவிற்கு 43-5 என்ற கணக்கில் இந்திய அணி விளையாடியது.
இதுவரை சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மன் கில் ராசா வீசிய பந்தில் போல்ட் ஆனார். களத்தில் ரவி பிஷ்னோய் - வாஷிங்டன் சுந்தர் இருந்தனர். அடுத்த இரு ஓவர்களுக்கு பெரிதாக ரன்கள் இல்லாத நிலையில், ரவி பிஷ்னோய் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிதாக விளையாடவில்லை. வந்த வேகத்தில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பிச் சென்றனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 102 ரன்களை எடுத்து படுதோல்வி அடைந்தது. இதில், இந்திய அணியில் சுப்மன் கில் 31 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா, தென்டை சத்தரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதையும் படிங்க: "நீங்க முதல்ல இங்கிலாந்து அணிக்கு அறிவுரை சொல்லுங்க" - மைக்கேல் வாகனை விளாசிய ரவி சாஸ்திரி! - T20 World Cup 2024