விசாகபட்டிணம்: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டிணம் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நேற்றைய தினம் முடிவில் 93 ஓவருக்கு 6 விக்கெட்டினை இழந்து 336 ரன் சேர்த்து இருந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்னுடனும் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 100.3 ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் ஃபோக்ஸ்-இடம் கேட்ச் கொடுத்து 20 ரன்னில் அஸ்வின் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் 277 பந்தில் 201 ரன் அடித்தார்.
இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு முன்னதாக சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி ஆகியோர் இந்த சாதனையைப் படைத்து இருந்தனர். மேலும் 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கவுதம் கம்பீர் அடித்த இரட்டை சதத்திற்கு பின்னர் இந்த சாதனை எட்டிய இடக்கை பேட்டரும் இவரே தான்.
முன்னதாக வினோத் காம்ப்ளி இரு முறையும், சவுரவ் கங்குலி ஒரு முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 2019ஆம் ஆண்டு மயங்க் அகர்வாலுக்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்ததும் யஷஸ்வி ஜெஸ்வால் தான். இவ்வாறு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளைத் தனதாக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 290 பந்தினை எதிர்கொண்டு 209 ரன் அடித்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 ஃபோர் மற்றும் 7 சிக்ஸர் அடுத்ததும் குறிப்பிடத்தக்கது. யஷஸ்வி ஜெஸ்வாலின் விக்கெட் வீழ்ந்த பின்னர் அடுத்தடுத்து இறங்கிய பும்ரா, முகேஷ் குமாரும் வந்த வேகத்தில் வெளியேற இந்திய அணி இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிஸ்சில் 112 ஓவரில் 396 ரன் சேர்த்து உள்ளது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸை துவங்கி உள்ளது.