சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனால் இந்த தொடரில் வெற்றி பெற போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதையும் படிங்க: ind vs aus test: மூன்றே நாளில் முடிச்சுவிட்ட ஆஸ்திரேலியா.. அடிலெய்டு டெஸ்டில் அபார வெற்றி!
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற 11வது சுற்று போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் குகேஷும், கறுப்பு நிற காய்களுடன் டிங் லிரெனும் விளையாடினர். இதில் ஆரம்பம் முதலே சாமர்த்தியமாக காய்களை நகர்த்திய குகேஷ், ஆட்டத்தின் 29வது நகர்தலில் வெற்றி பெற்றார்.
14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 6க்கு 5 என்ற புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலை பெற்றுள்ளார். இதன் காரணமாக எஞ்சியுள்ள 3 போட்டிகளை டிரா செய்தால் கூட குகேஷ் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அவ்வாறு அவர் சாம்பியன் பட்டம் வென்றால், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெறுவார்.