சென்னை: அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் 6வது கேரம் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் சென்னை புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரை சேர்ந்த 17 வயதான காசிமா மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் என்று சாதனை படைத்தார். இதையடுத்து தங்க பதக்கத்துடன் நாடு திரும்பிய வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கேரம் அசோசியேஷன் சார்பில் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தங்க மங்கை காசிமா, "எல்லா புகழும் இறைவனுக்கே, என்னை கேரம் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தமிழ்நாடு கேரம் அசோசியேஷனுக்கும் நான் சிறுவயதில் இருந்து விளையாட உதவி புரிந்த எனது தந்தை மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ததால் தான் எனது கனவு நினைவாகி உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் கேரம் போட்டியில் கலந்து கொண்ட போது போட்டிகள் கடினமாக தான் இருந்தது.
இருப்பினும் நம் நாட்டிற்காகவும் தமிழகத்திற்காகவும் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து கடுமையாக பயிற்சி எடுத்து வந்தேன். தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று உள்ளேன். கேரம் விளையாட்டில் அதிக பேருக்கு ஆர்வம் இல்லை.
கேரம் ஒரு நல்ல விளையாட்டு, இதில் அதிகப்படியானோர் பங்கேற்க வேண்டும், நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது" என்று காசிமா தெரிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு கேரம் அசோசியேஷன் தலைவர் நாசர்கான் கூறுகையில், "அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாடு திரும்பி உள்ள வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்கள் அமெரிக்கா செல்வதற்கு உதவி செய்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் விளையாட்டு கோப்பையில் கேரம் விளையாட்டு சேர்த்ததின் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் அனைவரும் கேரம் விளையாட்டை விளையாடி வருகின்றனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை போகும் வீரர் இவர் தான்..." முன்னாள் வீரர்கள் கணிப்பு கூறுவது என்ன?