டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்திற்கு முதல் நாள் இரவு அவர் என்னென்ன துயரங்களை எதிர்கொண்டார் என்பது குறித்து அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் மனம் திறந்து உள்ளார்.
ஹங்கேரியை சேர்ந்த வோலர் அகோஸ், இறுதிப் போட்டிக்கு முதல் நாள் இரவு வினேஷ் போகத் பட்ட துன்பங்கள் குறித்து தனது முகநூலில் பதிவிட்ட நிலையில், சில மணி நேரத்தில் அதை அவர் அழித்ததாக தகவல் கூறப்படுகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "அரை இறுதிக்குப் பிறகு, 2.7 கிலோ எடை அதிகமாக இருந்ததால், நாங்கள் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தோம்.
தொடர் பயிற்சியிலும் தோல்வி:
ஆனால் 1.5 கிலோ எடை குறையவில்லை. பின்னர், 50 நிமிட நீராவி குளியலுக்குப் பிறகு, அவள் உடலில் ஒரு துளி வியர்வை கூட தெரியவில்லை. வேறு வழியில்லை, நள்ளிரவு முதல் காலை 5:30 மணி வரை, வெவ்வேறு கார்டியோ இயந்திரங்கள் மற்றும் மல்யுத்த நகர்வுகள் என ஒரு மணி நேரத்தில் முக்கால் மணி நேரம், இரண்டு மூன்று நிமிட ஓய்வுடன் தொடர்ந்து வினேஷ் போகத் பயிற்சி செய்தாள்.
இதையே அன்று இரவு முழுவதும் அவள் மீண்டும் மீண்டும் செய்யத் தொடங்கினாள். பயிற்சியின் போது கிழே விழுந்த அவளை அருகில் இருந்த நாங்கள் தூக்கி நிறுத்தினோம். மீண்டும் ஒரு மணி நேரம் நீராவி குளியலில் நேரத்தை கழித்தாள். நான் வேண்டுமென்றே வியப்படைய வேண்டும் என்ற நோக்கில் இதை எழுதவில்லை, ஆனால் அவள் இறந்திருக்கலாம் என்று நினைத்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அன்று இரவு வினேஷ் போகத் தன்னிடம் பகிர்ந்து கொண்டது குறித்தும் பயிற்சியாளர் வோலர் அகோஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
வினேஷ் போகத் கூறியது என்ன?:
அந்த பதிவில், "என்னிடம் சோகத்திற்கு இருக்க வேண்டாம் எனக் கூறிய வினேஷ் போகத், கடினமான சூழ்நிலைகளில், உனக்கு கூடுதல் சக்தி தேவைப்படும் போது உன்னையே நீ தேடிக் கொள்வாய் என நான் அவளுக்கு கூறிய வார்த்தைகளை என்னிடம் மீண்டும் கூறி, நம்பர் ஓன் மல்யுத்த வீராங்கனையான ஜப்பானின் யூய் சுசாகியை வீழ்த்தியதை குறிப்பிட்டாள்.
மேலும், நம்பர் ஓன் வீராங்கனையை வீழ்த்தியதன் மூலம் தனது லட்சியத்தை அவள் அடைந்து விட்டதாகவும், உலகுக்கு தான் ஒரு சிறந்த மல்யுத்த வீராங்கனை என்பதை நிரூபிடுத்துவிட்டதாகவும் கூறினாள். விளையாட்டுக்கான திட்டங்கள் செயல்படுகின்றன என்பதை நிரூபித்துள்ளதாகவும். பதக்கங்கள், மேடைகள் வெறும் பொருள்கள் அதனால் செயல்திறனை பறிக்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டதாக வினேஷ் போகத் கூறியதாக" பயிற்சியாளர் வோலர் அகோஸ் பதிவிட்டுள்ளார்.
முகநூல் பதிவை அழிக்க காரணம் என்ன?:
ஆனால் இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களில் அவர் அதை அளித்ததாக தகவல் கூறப்படுகிறது. அவர் என்ன காரணத்திற்காக வினேஷ் போகத் குறித்த தனது முகநூல் பதிவை அழித்தார் என்பது குறித்து தெரியவில்லை. முன்னதாக இறுதிப் போட்டியில் தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார்.
இந்த மனுவை நடுவர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தனக்கும் வெள்ளிப் பதக்கத்தை இணைந்து வழங்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நடுவர் நீதிமன்றம் மனு மீதான தீர்ப்பை வெளியிடாமல் மூன்று முறை ஒத்திவைத்தது. இறுதியில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி வினேஷ் போகத்தின் வெள்ளிப் பதக்கம் கோரிய மனுவை நடுவர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதையும் படிங்க: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்! - Kolkata Doctor rape and muder case