சென்னை: சென்னையில் நடைபெறும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2024 தொடரின் இரண்டாம் நாள் முடிவில், இந்தியா 12 தங்கம், 13 வெள்ளி, 3 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. அதுமட்டுமின்றி, நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதினும், பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் பிரதிக்ஷாவும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 4வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் இரண்டாவது நாளாக நேற்று (செப்.12) நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்றைய தினத்தில் நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் உட்பட பல்வேறு வகையான பிரிவுகளில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது.
நீளம் தாண்டுதலில் தமிழக வீரர்கள் ஆதிக்கம்: இதில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதினும், பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் பிரதிக்ஷாவும் தங்கப்பதக்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் நீளம் தாண்டுதலில் 7.61 மீட்டர் நீளம் தாண்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதின் தங்கப்பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து 7.43 மீட்டர் தாண்டி மற்றொரு இந்திய வீரர் முகமது அட்டா 2வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனால், முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீரர்களே கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து பெண்கள் நீளம் தாண்டுதல் பிரிவில் பிரதிக்ஷா 5.79 மீட்டர் நீளம் தாண்டி தங்க பதக்கமும், லக்ஷன்யா 5.75 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஆடவர் பிரிவில் ஏற்கனவே தமிழ்நாடு வீரர் தங்கம் வென்றிருந்த நிலையில், மகளிர் பிரிவிலும் தமிழ்நாடு வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்று நீளம் தாண்டுதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீராங்கனை அனிஷா 49.91 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை அமனாத் 48.38 மீட்டர் எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
இந்தியா தொடர்ந்து முதலிடம்: இதனால், தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 12 தங்கம், 13 வெள்ளி, 3 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 4 தங்கம் உட்பட 19 பதக்கங்களுடன் இலங்கை 3ம் இடத்திலும், ஒரே ஒரு வெண்கல பதக்கம் வென்ற நேபாளம் மூன்றாமிடத்தில் உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு நாடுகள் இன்றும் ஒரு போட்டியில் கூட பதக்கம் பெறவில்லை என்பதும், இன்று இறுதி நாள் என்பதால் பதக்கம் வெல்ல இந்த நாடுகள் முயற்சி செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.