ஐதராபாத்: மாற்றுத் திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டியானது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் 167 நாடுகளில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுவரை போட்டியில் 3 தங்கம் 8 வெள்ளி 10 வெண்கலம் என 21 பதக்கங்களை இந்தியா வீரர் வீராங்கனைகள் வென்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்மிண்டன் விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் எஸ்யு5 பிரிவின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட மனிஷா ராமதாஸ் 21-க்கு 12, 21-க்கு 8 என்ற நேர் செட் கணக்கில் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்று தாயாகத்திற்கு பெருமை சேர்த்தார்.
பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் தனது மகள் முதல் முறையாக பங்கேற்று வெண்கலம் பதக்கம் வென்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் இத்தகைய போட்டியில் மகள் பங்கேற்று வெண்கலம் பதக்கம் வெல்வதற்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு அரசு பேருதவியாக இருந்து வந்ததாகவும் மணிஷா ராமதாஸின் தந்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், குறிப்பாக தற்போது உள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் விளையாட்டுத்துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும். விளையாட்டு வீரர்கள் திறமையை கண்டறிந்து கேட்காமலேயே அவர்களுக்கு தமிழக விளையாட்டுத்துறை அனைத்து உதவிகளும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரீசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் தன்னுடைய மகள் பங்கேற்று வெண்கலம் பதக்கம் வென்றது தமிழக அரசுக்கும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெருமை சேரும் என்றார். 2028 வரை விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நீடித்தால் தமிழக விளையாட்டுத்துறையில் அடுத்த பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் அதிக தங்கம் பெறுவது உறுதி என்றார்.
பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற தனது மகளுக்கு அரசு பணியும் தனது மகள் போல் மற்ற விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்திட திருவள்ளூரில் உலகத் தரம் வாய்ந்த அளவில் பயிற்சி அகடாமியும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இரண்டு கைகள் இல்லை.. ஆனால் நீச்சலில் தங்கம்! வியக்க வைக்கும் அசாதாரண மனிதர்! - Brazil swimmer Gabriel Geraldo