நியூயார்க்: 20 அணிகள் பங்கேற்று நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 22வது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - கனடா மோதின.
நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.
இதில், அதிகபட்சமாக ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் முகமது அமீர், ஹரிஷ் ரவுப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நசிம் ஷா, அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அணி. தொடக்க ஆட்டக்காரரகளாக முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களமிறங்கினர். இந்த இலக்கை விரைவில் எட்டினால் பாகிஸ்தான் ரன் ரேட் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கனடா அணி கட்டுக்கோப்பான பந்து வீசி பாகிஸ்தான் அணிக்கு நெருங்கடி கொடுத்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய சைம் அயூப் 6 ரன்களில் வெளியேற, இரண்டாவது விக்கெட்டிற்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஜ்வான் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் இணைந்து 63 ரன்கள் சேர்த்தனர். இதில், 33 ரன்கள் எடுத்து இருந்த பாபர் அசாம் தில்லன் ஹெய்லிகர் வீசிய பந்தில் விக்கெட் இழந்து வெளியேறினார். அடுத்த வந்த பக்கர் ஜமான் நான்கு ரன்களில் அவுட் ஆகி வெளியேற, தனி ஆளாகப் போராடிய ரிஸ்வான் 53 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.
இதனால், 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். கனடா அணி தரப்பில் தில்லன் ஹெய்லிகர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்துள்ளது.
இதையும் படிங்க: தலைகீழாக மாறிய ஆட்டம்.. வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா.. சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது!