ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 50வது போட்டி இன்று (மே.02) ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 5வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களான டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். அதிரடியான இந்த கூட்டணி இன்று சற்று தடுமாறியது. 4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்த கூட்டணி, 5வது ஓவரை வீச வந்த ஆகேஷ் கானிடம் பிரிந்தது. அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின், அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழக்க, இதனை அடுத்து களம் வந்த நிதிஷ் குமார் ரெட்டி - ஹெட்யுடன் சேர்ந்து ரன்களை சேர்க்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் செட்டான இந்த கூட்டணி, பின்னர் அதிரடியாக விளையாடத் தொடங்கியது. 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் எட்டிய இந்த கூட்டணி, அவேஷ் கானின் பந்து வீச்சில் பிரிந்தது. 58 ரன்கள் விளாசி இருந்த டிரவிஸ் ஹெட் போல்ட் ஆகி வெளியேறினார்.
ஆனால், மறுபக்கம் நிதிஸ் குமார் ரெட்டி அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து வழங்கி கொண்டு இருந்தார். க்ளெசன் ஒருபக்கம், நிதிஸ் ரெட்டி மறுபக்கம் என அதிரடி காட்டினர். சுழல் பந்து வீச்சாளர் சஹாலின் பந்தை க்ளெசன் அதிடி நொருக்கினார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
களத்தில் 76 ரன்களுடன் நிதிஷ் ரெட்டியும், 42 ரன்களுடன் க்ளெசனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் சந்தீப் சர்மா 1 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது.
இதையும் படிங்க: அதிகாரப்பூர்வமாக கிராண்ட் மாஸ்டர்.. வைரலாகும் தமிழக வீராங்கனை வைஷாலியின் எக்ஸ் பதிவு! - Chess Player Vaishali