ஹைதராபாத்: 17வது லீக் தொடரின் 57வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொண்டது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில், இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. இதில் அதிராடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் பதோனி, 30 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் குவித்தார். அதேபோல் நிலைத்து ஆடிய நிக்கோலஸ், 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 46 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிசேக் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து லக்னோ பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்.
இதனால் யாரை ஓவர் வீச அழைப்பது என கே.எல்.ராகுல் எண்ணுவதற்குள் 16 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார் டிராவிஸ் ஹெட். மறு முனையில் இளம் வீரரான அபிசேக் சர்மா தன்னுடைய பங்கிற்கு பேட்டைச் சுழற்ற 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் குவித்தது ஹைதராபாத்.
இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட், 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 75 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் 4 வது இருந்த ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:சிஎஸ்கே VS ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!