ஸ்ரீநகர்: ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்ய மாஸ்கோ நட்சத்திரங்களின் வுஷு சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனைகளான அயிரா சிஷ்டி மற்றும் அன்சா சிஷ்டி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
ஸ்ரீநகரைச் சேர்ந்த இந்த இரட்டை சகோதரிகள் 52 மற்றும் 56 எடைப் பிரிவில் ரஷ்ய வீராங்கனைகளைத் தோற்கடித்து இந்த தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். இது அயிரா சிஷ்டி தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கம் ஆகும். அயிரா இதற்கு முன்னதாக ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியில் தங்கமும், இந்தோனேசியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
அதேபோல் சர்வதேச வுஷு சாம்பியன்ஷிப்பில் அன்சா சிஷ்டி வெல்லும் 2வது பதக்கம் ஆகும். முன்னதாக இவர் ஜார்ஜியாவில் நடந்த சர்வதேச வுஷு சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது சர்வதேச வுஷு சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாகத் தங்கப் பதக்கத்தை வென்று உள்ளார். மேலும், அயிரா சஷ்டி மற்றும் அன்சா ஆகியோர் தங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் தங்களின் குடும்பத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக அயிரா சிஷ்டி, அன்சா சிஷ்டி என்ற இரட்டை சகோதரிகள் இருவரும் அந்தந்த எடைப் பிரிவுகளில் சர்வதேச வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களது தொடர் சாதனை காஷ்மீர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதிப்படுத்துகிறது. மேலும், விளையாட்டில் ஆர்வம் உள்ள மற்ற பெண்மணிகளையும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இவர்களின் தந்தை ரயீஸ் சிஷ்டி கூறுகையில், "ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பெற்ற வெற்றி அயிரா சிஷ்டி மற்றும் அன்சா சிஷ்டி ஆகியோரின் தனிப்பட்ட திறமைக்கு மட்டுமல்லாமல் காஷ்மீரின் விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்புக்குக் கிடைத்தது. இந்தச் சாதனையானது ஜம்மு மற்றும் காஷ்மீருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த சாதனையைப் படைத்த இரட்டை சகோதரிகளான அயிரா சிஷ்டி மற்றும் அன்சா சிஷ்டி ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சன்ரைசஸ் ஐதராபாத் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்! எய்டன் மார்க்ராம் நீக்கம்! பின்னணி என்ன?