டம்புலா: இலங்கையில் 9வது மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. இதன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதன்படி நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.
அப்போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து, மகளிர் ஆசிய கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று டம்புலாவில் நடைபெற்றது.
A maiden Women's Asia Cup title for Sri Lanka 👏#SLvIND 📝: https://t.co/QjLIRY5Yfs | 📸: @ACCMedia1 pic.twitter.com/hISNnvU6nq
— ICC (@ICC) July 28, 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி துவக்கம் தந்தனர். இதில் ஷஃபாலி வர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய உமா ஷேத்ரி 9 ரன்களிலும், ஹர்மன்பிரீத் கவுர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்தார்.
இவர் சந்தித்த 47 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் குவித்தார். இறுதி ஓவர்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்களும், ரிச்சா கோஸ் 30 ரன்களும் அடித்து வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எட்டியது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு விஷ்மி குணரத்னே மற்றும் கேப்டம் சமாரி அத்தப்பத்து ஆகியோர் களமிறங்கினர். இதில் விஷ்மி குணரத்னே 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய ஹர்சிதா சமரவிக்கிரம மற்றொரு துவக்க ஆட்டக்காரர் சமாரி அத்தப்பத்துவுடன் ஜோடி சேர்ந்து வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
சமார் அத்தப்பத்து 61 ரன்களில் அடித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய தில்ஹாரி, ஹர்சிதாவுடன் கைகோர்த்து இலக்கை எட்டினர். இலங்கை அணியில் ஹர்சிதா 69 ரன்களிலும், தில்ஹாரி 30 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மகளிர் ஆசியக் கோப்பையை கைப்பற்றியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கம்.. மனு பாக்கருக்கு குவியும் பாராட்டுக்கள்!