மேற்கிந்தியத் தீவுகள்: உலகக் கோப்பை டி20 தொடரின் 31வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நேபாளம் அணியை எதிர்கொண்டது. தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், நேபாளம் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்று வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கியது. இதன்படி, டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக், ஹெண்டிரிக்ஸ் பொறுமையாக ஆட்டத்தை தொடங்கினர்.
இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் டிபேந்திர சிங் வீசிய ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து டி காக் 10 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் மார்க்ரம், ஹெண்டிரிக்ஸ் இணைந்து அதிரடியாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்த நிலையில், மார்க்ரம் 15 ரன்களுக்கு புர்டெல் பந்தில் போல்டானார்.
பின்னர் வந்த கிளாசென், டேவிட் மில்லர் உள்ளிட்ட தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். பொறுமையாக ஆடிய ஹெண்டிரிக்ஸ் மட்டும் 49 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.
நேபாளம் அணியின் பவுலர் புர்டெல் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை மிக எளிதாகக் கையாண்டது.
முதல் விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், புர்டெல் 13 ரன்களுக்கு நடையைக் கட்டினார். ஷம்சி வீசிய அதே ஓவரில் ரோகித் டக் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய அனில் சா, ஆசிஃப் ஷேக்குடன் இணைந்து பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், அனில் சா 27 ரன்களுக்கு மார்க்ரம் பந்துவீச்சில் அவுட்டானார்.
பின்னர், தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் நேபாளம் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்கத் திணறினர். ஷம்சி வீசிய இன்னிங்ஸின் 17வது ஓவர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. நேபாளம் அணிக்கு முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஆசிஃப் ஷேக் 42 ரன்களுக்கு போல்டானார். இதனையடுத்து, நேபாளம் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது, நார்க்கியா பந்தில் நேபாளம் வீரர் சோம்பால் கமி சிக்ஸ் அடித்து ஆட்டத்தை மீண்டும் நேபாளம் பக்கம் திருப்பினார். பின்னர், 7 பந்துகளில் நேபாளம் வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குல்சன் ஜா பவுண்டரி அடித்தார். அப்போது மைதானத்தில் இருந்த நேபாளம் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், குல்சான் ஜா ஒரு ரன் எடுக்க ஓட முயன்ற போது ரன் அவுட்டானார். இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். நேபாளம் அணி வீரர்கள் போராடி தோற்ற நிலையில், வீரர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: வெளியேறியது பாகிஸ்தான்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா! - T20 World Cup 2024