கொல்கத்தா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 54 ரன்கள் விளாசினார். அதேபோல் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆந்திரே ரஸ்செல் 25 பந்துகளில் 7 சிக்சர் 3 பவுண்டரி என விளாசி 64 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து விளையாடிய ஐதரபாத் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளெசன் (63 ரன்) மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினார். மற்ற வீரர்க்ள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் ஐதராபாத் அணி இறுதியில் தோல்வியை தழுவியது. 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆந்திரே ரஸ்செல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதனை பாலிவுட் நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கானுக்கு அர்ப்பணித்தார். இந்த நிலையில் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ஷாருக்கான் தனது அறைக்கு சென்று புகைப்பிடிக்க தொடங்கினார்.
இது தொடர்பான வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. ஷாருக்கான் புகைபிடிக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கி ஷாருக்கான் கொல்கத்தா மைதானத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : RR Vs LSG: லக்னோக்கு 194 ரன்கள் வெற்றி இலக்கு! சஞ்சு சாம்சன் அபாரம்! - IPL 2024 RR Vs LSG