கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.21) மதியம் 3.30 மணிக்கு 36வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்று பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் விளையாடிய 7 ஆட்டங்களில் 1ல் மற்றும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. போட்டியில் தொடர வேண்டுமானால் அடுத்தடுத்த ஆட்டங்களில் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் பெங்களூரு அணி தவித்து வருகிறது.
அதேநேரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றியும், 2ல் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது.
கடை ஆட்டத்தில் கண்ட தோல்வியில் இருந்து மீண்டு வர இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் கொல்கத்தா அணி களமிறங்கும். உள்ளூரில் ஆட்டம் நடப்பது கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. அதேநேரம் வெற்றிக்காக பெங்களூரு அணியும் எந்த எல்லைக்கும் செல்லும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரேன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், அந்திரே ரஸ்செல், ரின்கு சிங், ராமந்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்.