அகமதாபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.28) மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 84 ரன்களும், ஷாருக்கான் 58 ரன்களும் குவித்து அணி 200 ரன்கள் தொட உறுதுணையாக இருந்தனர். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது.
தொடக்க வீரர் பாப் டு பிளெசிஸ் தனது பங்குக்கு 24 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கூட்டணி அமைத்த மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலி மற்றும் வில் ஜேக்ஸ் இணை அபாரமாக விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தியது. இதில் சிக்சர் மழை பொழிந்த வில் ஜேக்ஸ் குழுமியிருந்த பெங்களூரு ரசிகர்களை இடைவிடாமல் குஷிப்படுத்தினார்.
அவருக்கு உறுதுணையாக விராட் கோலி ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு திருப்பி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். இருவரையும் பிரிக்க குஜராத் வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ரஷித் கான் பந்துகளை சவைத்து துப்பிய இருவரும் சிக்சர், பவுண்டரி விளாசினர்.
அபாரமாக விளையாடிய இருவரும் 16 ஓவர்களில் ஆட்டத்தை நிறைவு செய்தனர். 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 70 ரன்களுடனும், ஆட்ட நாயகன் வில் ஜேக்ஸ் 10 சிக்சர், 5 பவுண்டரி என 41 பந்துகளில் சதம் விளாசினார்.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ஆறுதல் அளிக்கும் வகையில் சாய் கிஷோர் மட்டும் 1 விக்கெட் வீழத்தினார். மற்றபடி ரஷித் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 51 ரன்களை வாரி வழங்கினார்.
இதையும் படிங்க: டாஸ் வென்று ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு! ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? - IPL2024 CSK Vs SRH Match Highlights