சென்னை: 17வது ஐபிஎல் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டூ பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கோலி, டூபிளஸிஸ் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். முதல் ஓவர் முதலே டூபிளஸிஸ் பவுண்டரிகளாக விளாசினார். பின்னர் பந்து வீச வந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான் டூபிளஸிஸ் (35) விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய பட்டிதார், அதே ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.
சஹார் பந்தில் மேக்ஸ்வெல்லும் டக் அவுட்டாக, ஆர்சிபி (RCB) பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. சற்று அதிரடியாக ஆடி வந்த கோலி (21), முஸ்தஃபிசூர் பந்தில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு ரஹானே, ரவீந்திரா ஆகியோரது கூட்டு முயற்சியில் அற்புதமான கேட்ச்சில் அவுட்டானார். அவரை பின்தொடர்ந்து கேமரான் கிரீனும் (18) அவுட்டாக ஆர்சிபி செய்வதறியாது திணறியது.
பின்னர் தினேஷ் கார்த்திக், ராவத் ஜோடி சற்று பொறுமையாக ஆடி ரன்கள் சேர்க்க தொடங்கியது. சற்று நிலைத்து நின்ற இந்த ஜோடி, பின்னர் அதிரடியாக ஆடத் தொடங்கியது. கார்த்திக், ராவத் இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினர். தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்த நிலையில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 173 ரன்கள் எடுத்தது.
தினேஷ் கார்த்திக் 38 ரன்களும், ராவத் 48 ரன்களும் எடுத்தனர். 6 விக்கெட்டுக்கு கார்த்திக், ராவத் ஜோடி 95 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி சார்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடக்க விழா: களைகட்டும் ஏஆர் ரஹ்மானின் கலை நிகழ்ச்சி! அக்ஷய் குமார், டைகர் ஷெராப் பங்கேற்பு! - IPL 2024 Opening Ceremony