டெல்லி: மகளிர் பிரீமியர் லீக்(WPL) கிரிக்கெட் இரண்டாவது சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது பெங்களூரு அணி.
நடப்பாண்டுக்கான 20 ஓவர்களை கொண்ட டி20 மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. இரண்டாவது சீசன் இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி வீராங்கனைகள் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகினர்.
பெங்களுரூ அணியின் சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர். அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோல சமூக வலைத்தளங்களில் பலரும் பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்களவை தேர்தல்: இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கலா? ஜெய் ஷா விளக்கம்!