ஐதராபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் என்று 2 பேட்ச்களாக மெல்போர்ன் செல்ல உள்ளனர். இந்திய அணியுடன் கேப்டன் ரோகித் சர்மாவும் பயணிக்க உள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் 2 பேட்ச்களாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளனர். அங்கு சென்று இந்தியா ஏ அணியுடன் இணைந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
முதலில் இந்தியா vs இந்தியா ஏ அணிகளுக்கு இடையில் போட்டி நடப்பதாக இருந்தது. ஆனால் போட்டி நடத்தப்படுவதற்கு பதிலாக பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் அனைவரும் இணைந்து பயிற்சி மேற்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனால் நவம்பர் 13 முதல் நவம்பர் 17 வரை இந்திய அணி வீரர்களுடன் இணைந்து இந்தியா ஏ அணி வீரர்களும் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நவம்பர் 22ஆம் தேதி நடக்க உள்ள பெர்த் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக ரோகித் சர்மா பேசும் போதும் கூட, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவேனா என்பது தெரியாது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். சுமார் 6 மணி நேரமாக தொடர்ந்த மீட்டிங்கில் ஏராளமான விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதேபோல் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாளை இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணிக்க உள்ளது தெரிய வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாததால், ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு தாமதமாகவே பயணிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் தட்ப வெட்ப சூழல், ஆடுகளத்தின் தன்மை உள்ளிட்டவை அறிவதற்காக ரோகித் பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் மோசமான பேட்டிங் ஃபார்மில் உள்ள ரோகித் சர்மா, இந்தியா ஏ அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரோகித் சர்மா பெர்த் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: "எனது மகனின் 10 ஆண்டு வாழ்க்கையை சீரழித்த 3 கேப்டன்கள்.." சஞ்சு சாம்சனின் தந்தை கூறியது யாரை தெரியுமா?