பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை இந்திய அணி வென்று உள்ளது. முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி பதக்க வென்றது.
ஏறத்தாழ 41 ஆண்டுகளுக்கு பின்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது. அதன்பின் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் இந்திய ஹாக்கி அணி மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பை பெற்று உள்ளது. 1928, 1932, 1936, 1948, 1952, 1956 ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ச்சியாக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது.
தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக ஒலிம்பிக் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அதன்பின் 1964 ஆம் ஆண்டு மீண்டும் ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வென்றது. தொடர்ந்து 1968 மற்றும் 1972 ஆகிய ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெணகலப் பதக்கம் வென்றது.
கடந்த 1980ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்கம் வென்றது. அதன்பின் 40 ஆண்டுகள் இந்திய ஹாக்கி அணியால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஏறத்தாழ 41 ஆண்டுகால தாகத்தை 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலம் வென்று தீர்த்து வைத்தது. அதன் பின் தற்போது 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று உள்ளது.
இந்த போட்டியுடன் இந்திய அணியின் கோல் கீப்பர் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேஷ் இந்த ஆட்டத்துடன் ஹாக்கி போட்டியில் இருந்து விடை பெறுகிறார். கடைசி ஆட்டத்தில் விளையாடிய அவருக்கு இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்துடன் பிரியாவிடை வழங்கி உள்ளது. ஏறத்தாழ இந்திய ஹாக்கி அணியில் 18 ஆண்டுகள் விளையாடிய ஸ்ரீஜேஷ் தற்போது ஓய்வு பெற்று உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் ஒரு சாதனையை இந்திய அணி படைத்து உள்ளது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. ஒலிம்பிக்கில் இந்திய அணி பெற்ற இரண்டாவது பதக்கம், இது மேலும் சிறப்பு.
இந்திய அணியின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வின் வெற்றி. அணியின் மகத்தான துணிச்சலையும் நெகிழ்ச்சியையும் காட்டினார்கள். வீரர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் ஹாக்கியுடன் உணர்ச்சி ரீதியிலான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் இந்த சாதனை நம் தேசத்தின் இளைஞர்களிடையே விளையாட்டை மேலும் பிரபலமாக்கும்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலம்! ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வரலாறு! - Paris olympics 2024