ஐதராபாத்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (109 ரன்) மற்றும் திலக் வர்மா (120 ரன்) ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்கள் முடிவில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா, ரமன்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடிய கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி போட்டியில் இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் மேலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகி உள்ளனர்.
ஒரு டி20 இன்னிங்சில் சதம் விளாசிய மூன்றாவது ஜோடி என்ற சாதனையை சஞ்சு சாம்சன் - திலக் வர்மா ஜோடி படைத்தது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு பல்கேரியா அணிக்கு எதிரான போட்டியில் செக் குடியரசு வீரர்கள் சபாவுன் டேவிசி - டிலான் ஸ்டெய்ன் ஆகியோர் முதல் முறையாக ஜோடியாக சதம் விளாசி இருந்தனர்.
அதைத் தொடர்ந்து ஜப்பானை சேர்ந்த கெண்டல் கடோவாக்கி ப்ளெமிங் மற்றும் லாச்லான் யமமோட்டோ லேக் இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவுக்கு எதிரான போட்டியில் ஜோடியாக சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை இந்திய அணி 3 முறை 250-க்கும் மேல் ரன்கள் குவித்துள்ளது.
இதன் மூலம் அதிக முறை 250 ரன்களுக்கு மேல் அடித்த அணி என்ற சிறப்பையும் இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன் செக் குடியரசு, ஜப்பான், ஜிம்பாப்வே, ஆகிய அணிகள் இரண்டு முறை 20 ஓவர் போட்டியில் 250 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திலக் வர்மா - சஞ்சு சாம்சன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு அடித்த 210 ரன் பார்ட்னர்ஷிப் தான் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நேற்று ஒரே நாளில் இந்திய அணி 23 சிக்சர்களை பறக்கவிட்டது.இதன் மூலம் ஆடவர் டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸ் இன்னிங்ஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் காம்பியா அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 27 சிக்சர்களை விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்றால் அது நேற்றிரவு இந்தியா விளாசிய 283 ரன்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Mike Tyson-ஐ தோற்கடிச்சவருக்கு இத்தனை கோடியா! அப்ப மைக் டைசனுக்கு எவ்வளவு தெரியுமா?