ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மினி வீரர்கள் ஏலமும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலமும் நடத்தப்படும். அதன்படி அடுத்த 2025 ஐபிஎல் சீசனுக்கு முன் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மொத்தம் உள்ள 10 அணிகளும் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட வீரர்கள் 10 அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 200க்கும் மேற்பட்ட வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 4ஆம் தேதியுடன் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் முன்பதிவு செய்து கொள்வதற்கான கெடு நிறைவடைந்த நிலையில், ஏறத்தாழ ஆயிரத்து 500 வீரர்கள் முன்பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறை முன்னணி வீரர்கள் பலர் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளதால் பல ஆச்சரிய சம்பவங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எந்த சீசனிலும் இல்லாத வகையில் அதிக தொகைக்கு வீரர்கள் ஏலம் போவார்கள் எனக் கருதப்படுகிறது. அப்படி 20 கோடி ரூபாய் வரை ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படும் டாப் வீரர்களை இங்கு காணலாம்.
ரிஷப் பன்ட்:
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பன்ட் இந்த ஐபிஎல் சீசனில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வீரர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் உள்ளிட்டவற்றை பார்க்கையில் மெகா ஏலத்தில் அவர் தனது இருப்பை கட்டாயம் நிரூபிப்பார் என கணிக்கப்பட்டுள்ளது.
கே.எல் ராகுல்:
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.எல்.ராகுலும் இந்த முறை அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். கடந்த சில போட்டிகளில் அவரது ஆட்டம் மெச்சும் வகையில் இல்லாத போதும், அவரும் அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாஸ் பட்லர்:
இங்கிலாந்து வீரர் ஜாஸ் படர். விக்கெட் கீப்பர், ஓப்பனர், கேப்டன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் என பண்முகத் திறன் கொண்டவர். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என இரண்டு பேரை தேடி வரும் டெல்லி உள்ளிட்ட அணிகளுக்கு இவர் சிறந்த தேர்வாக இருப்பார். அதனால் 20 கோடி ரூபாய் வரை ஏலம் போக வாய்ப்பு உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர்:
கடந்த சீசனின் கோப்பை நாயகன். ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த பின்னரும் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்திய கேப்டனாக சிறந்த திறன் கொண்டவர் என்பதால் அணிகளுக்கு இடையே இவரை எடுப்பதில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேக் பிரேசர் மெக்கர்க்:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 22 வயதே ஆன Jake Fraser-McGurk. இந்த சீசனில் நிச்சயம் கடும் கிராக்கி ஏற்படும் வீர்ர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை ஏலத்தில் எடுக்க நிச்சயம் அணிகளிடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.
மிட்செல் ஸ்டார்க்:
கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 24 கோடியே 75 லட்ச ரூபாய் என்ற பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் சொதப்பி வந்தாலும் பிளே ஆப் சமயங்களில் ஸ்டார்க்கின் அனுபவம் கொல்கத்தா அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல உறுதுணையாக இருந்தது. இந்த முறை அவர் மீண்டும் ஏலத்தில் களமிறங்க உள்ள நிலையில், இரண்டாவது முறையாக 20 கோடி ரூபாய்க்கு மேல் கேட்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஷான் கிஷன்:
கடந்த 2022 ஐபிஎல் சீசனை வரை மும்பை அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷனுக்கு, அணி நிர்வாகம் அதிகபட்சமாக 15 கோடியே 25 லட்ச ரூபாய் வரை ஊதியம் வழங்கி வந்தது. 26 வயதான இஷான் கிஷன் இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போகக்கூடிய வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இதையும் படிங்க: ரஞ்சி விளையாட ரூ.50 லட்சம்.. யு 23 விளையாட ரூ.30 லட்சம்... வீரர்களிடம் பணம் வசூல்! எங்க தெரியுமா?