ஐதராபாத்: பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிதீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை அந்நாடு இழக்க நேரிடும் சூழல் நிலவுவதாக தகவல் கூறப்படுகிறது.
ஹைபிரிட் மாடல்:
ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்து விட்டது. இதனால் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தி வருகிறது.
இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு அசைந்து கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் பாகிஸ்தானுக்கு புது சிக்கல் உருவாகி உள்ளது. பாகிஸ்தானில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக மீதமுள்ள இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விளையாட இலங்கை ஏ அணி மறுத்துவிட்டதாக தகவல் கூறப்படுகிறது.
1996ஆம் ஆண்டுக்கு பின்:
அதேநேரம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ள பல்வேறு அணிகளும் பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து சுட்டிக் காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுப்பு தெரிவிக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானின் கையை விட்டுச் செல்லும் நிலை ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. 1996ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது.
எங்கு இறுதிப் போட்டி?:
இந்நிலையில், அங்கு நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் புது சிக்கலாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு அமைந்துள்ளது. ஒருவேளை ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏனைய போட்டிகளும், இந்தியா இறுதிப் போட்டிக்கு நுழையும் பட்சத்தில் அப்போட்டி துபாயிலும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழு நாளை (நவ.29) பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது. தற்போது அங்கு நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்படலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உலக செஸ் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் குகேஷ் முதல் வெற்றி! சாம்பியனாக இன்னும் எத்தனை வெற்றி தேவை?