சென்னை: ஒலிம்பிக் திருவிழா இன்னும் ஒரு சில நாட்களில் (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலகலமாக தொடங்கவுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வெற்றிக்கனிகளை பறிக்க சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் பாய்மர படகு போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது வீரர்களாக தேர்வாகி உள்ள நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன் ஆகியோர் பற்றி இச்செய்தித் தொகுப்பில் காணலாம்.
நேத்ரா குமணன்: சென்னையை சேர்ந்த 27 வயதான நேத்ரா குமணன் சென்னையில் தனது பள்ளி , ல்லூரி படிப்பை முடித்துள்ளார். தனது 12 வயதில் தமிழ்நாடு பாய்மர படகு சங்கம் நடத்திய கோடைக்கால முகாமின் போது முதன்முதலில் பாய்மரப் படகு போட்டியில் கலந்து கொண்டார்.
- நேத்ரா குமணன் தனது 17வது வயதில் தேசிய அளவில் பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொள்ள தொடங்கினார்.
- தேசிய அளவில் பாய்மர படகுப் போட்டியில் இரண்டு முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும், இரண்டு முறை இரண்டாம் இடத்தையும் இவர் பிடித்துள்ளார்.
- 2014ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7வது இடத்தையும், 2018 இந்தோனேசியா தலைநகர் ஜகார்டாவில் நடைபெற்ற போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.
- மேலும்2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் மியாமியில் நடந்த ஹெம்பல் பாய்மரப் படகு உலகக் கோப்பைத் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
- உலகக் கோப்பை பாய்மரப்படகு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை நேத்ரா குமணன் பெற்றுள்ளார்.
- அதனை தொடர்ந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். டோக்கியோ ஒலிம்பிக் 2020 நேத்ரா குமணனின் முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக 35வது இடத்தைப் பிடித்தார். இதில் 44 பங்கேற்பாளர்களில் பெண்களுக்கான லேசர் ரேடியல் பிரிவில் மூன்றாவது பந்தயத்தில் 15வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அளவில் தகுதி பெற்ற இரண்டாவது நபரான பெருமையை பெற்றார்.
விஷ்ணு சரவணன் - வேலூரை சேர்ந்த விஷ்ணு சரவணன் ராணுவத்தில் சுபேதாராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தையும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். விஷ்ணு சரவணனின் சகோதரியும் பாய்மரப்படகு போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஷ்ணு சரவணன் சிறு வயதில் தனது தந்தை மும்பையில் பணியில் இருந்ததால் மும்பை படகு முனையத்தில் தனது பாய்மரப்படகு போட்டியின் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். 9 வயதில் பாய்மரப்படகு போட்டியில் பங்கேற்க தொடங்கினார்.
- 2015ஆம் ஆண்டிற்கு பிறகு தேசிய போட்டிகளில் பங்கேற்று, ஜூனியர் தேசிய போட்டிகளில் பல பதக்கங்களை வெல்லத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டில் இளைஞர் (young category) தேசிய சாம்பியன் ஆனார். அதே ஆண்டில் ஹாங்காங் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது சர்வதேச பதக்க வேட்டையை தொடங்கினார்.
- 2017ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் நைப் சுபேதாராக பணியில் சேர்ந்துள்ளார்.
- 2018ஆம் ஆண்டில் பாய்மரப் போட்டியில் தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினார்.
- சர்வதேச அளவில் போட்டியில் பங்கேற்பதால் சர்வதேச அளவில் பாய்மரப்படகு போட்டியில் சிறந்து விளங்கிய அலெக்சாண்டர் டெனிசியக்கினின் அகாடமியில் பயிற்சியை தொடங்கினார்.
- 2019இல் குரோஷியாவில் நடந்த 21 வயதிற்குட்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதல் சர்வதேச பதக்கத்தை(வெண்கலம்) வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
- இதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் அபுதாபியில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தேர்வானபோது கரோனா தொற்று உறுதியானதால் அவர் பங்கேற்க முடியாமல் போனது.
- கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த விஷ்ணு சரவணன் முசானா ஓபன் சாம்பியன்ஷிப் 2021 ஆசிய ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்றது மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.
- டோக்கியோ 2020இல் தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற விஷ்ணு சரவணன் 35 பேர் பங்கேற்ற போட்டியில் 20வது இடத்தைப் பிடித்தார்.
- 2022ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு ILCA7 பிரிவில் கான்டினென்டல் சாம்பியனாக தன்னை உயர்த்திக்கொண்டார்.
- 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று தனது சர்வதேச பதக்க எண்ணிக்கையை கூட்டினார்.
- இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 152 பேர் பங்கேற்ற ஆண்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 26வது இடத்தைப் பிடித்து பாரீஸ் 2024 ஒலிம்பிக் பாட்டில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
- 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்; நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ரா..தடகளத்தில் அசத்த காத்திருக்கும் இந்திய வீரர்கள்! - neeraj chopra