சேலம்: டிஎன்பிஎல் தொடர் 8வது சீசன் சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று (ஜூலை 11) சேலத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings), சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans) அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அபிஷேக், கவின் ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்நிலையில், சேலம் அணி 13 ரன்கள் எடுத்திருந்த போது அபிஷேக் 6 ரன்களுக்கு அவுட்டானார்.
இதனையடுத்து கவின் 16 ரன்களுக்கு அவுட்டானார். 3வது வீரராக களமிறங்கிய ராபின் 23 ரன்கள் எடுத்தார். பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விவேக் (13), விஷால் வைத்யா (12), ஷிஜித் சந்திரன்(20), சந்து (14) ஆகியோர் வந்த வேகத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். கடைசி கட்ட ஓவர்களில் அத்னான் கான் (10), ஹரிஷ் குமார் (17) சற்று அதிரடி காட்டினர். 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
எளிதில் எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரிஹரன், சந்து பந்தில் டக் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அஜிதேஷ்(45) பொறுமையாக ஆடி ரன்கள் குவித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அருண் கார்த்திக் 11 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஜகோபால் 19 ரன்களுக்கு அவுட்டான நிலையில், சூர்யபிரகாஷ்(43) பொறுப்பாக விளையாடினார்.
ஆனால், கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் ஈஸ்வரன்(1), ஹரிஷ் (13) சொற்ப ரன்களில் அவுட்டாக ஆட்டம் சூடு பிடித்தது. இந்நிலையில் இலக்கு குறைவாக இருந்ததால் நெல்லை அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறும் போட்டியில் சியாச்சம் மதுரை பேன்தர்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதையும் படிங்க: நடராஜன் அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. நடப்பு தொடரில் முதல் வெற்றி! - TNPL 2024