டெல்லி: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஊக்க மருந்து சோதனைக்கான தனது சிறுநீர் மாதிரிகளை வழங்கத் தவறியதாகி எதிர்வரும் மல்யுத்த போட்டிகளில் விளையாட தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அவரை இடை நீக்கம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி அரியானா மாநிலம் சோனேபட்டில் உள்ள ஆய்வகத்தில் அவரது தனது மாதிரிகளை வழங்கயிருக்க வேண்டிய நிலையில் அதனை செய்யத் தவறியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஜூலை மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பஜ்ரங் புனியா கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் ஏப்ரல் 23ஆம் தேதியிடடு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மறு உத்தரவு வரும் வரை அனைத்து வகையிலான மல்யுத்த போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பஜ்ரங் புனியா கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்திடம், தனது ஊக்கமருந்து சோதனைக்கான மாதிரிகளை வழங்க ஒருபோதும் மறுத்ததில்லை என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்துமாறு கூறப்பட்ட செய்தியை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணைய அதிகாரிகளிடம் எனது ஊக்கமருந்து சோதனைக்கான மாதிரிகளை வழங்க நான் ஒருபோதும் மறுத்ததில்லை. எனது ஊக்க மருந்து மாதிரியை எடுக்க அவர்கள் கொண்டு வந்த காலாவதியான கிட் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்கு முதலில் பதிலளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
அதன் பின்னர் எனது ஊக்கமருந்து சோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும். இந்தக் கடிதத்திற்கு எனது வழக்கறிஞர் விதுஷ் சிங்கானியா உரிய நேரத்தில் பதிலளிப்பார்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஊக்கமருந்து மாதிரிகளை சேகரிக்க வந்த அதிகாரி காலாவதியான கிட் கொண்டு வந்ததாக பஜ்ரங் புனியா வீடியோ வெளியிட்டு இருந்தார்.
ஆனால் இது தொடர்பாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேநேரம் பஜ்ரங் புனியா ஊக்கமருந்து சோதனைகளுக்கு உட்பட மறுத்து வெளியேறியதாகவும், அவர் மீது நடவைடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த போதிலும் அவர் வெளியேறியதாக ஊக்கமருந்து சோதனை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஊக்கமருந்து சோதனைகளுக்கான ஆவணங்களை சமர்பிக்க மறுத்தது மற்றும் சோதனைக்கான சிறுநீர் மாதிரிகளை வழங்க மறுத்தது குறித்து மே 7ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்கக் கோரி பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.