டாக்கா : வங்கதேச பிரீமியர் லீக் (பிபிஎல்) கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பந்துவீச்சாளர் முஸ்தபிசு ரஹ்மான் கமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், கமிலா விக்டோரியன்ஸ் அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது.
அப்போது, லிட்டன் தாஸ் அடித்த பந்து முஸ்தபிசு ரஹ்மான் இடதுபுற தலையில் பலமாக தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் முஸ்தபிசு ரஹ்மான் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அருகில் இருந்த சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முஸ்தபிசுர் ரஹ்மானை உடனடியாக மீட்டனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அருகில் இருந்த மருத்துவமனையில் முஸ்தபிசு ரஹ்மான் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளை பகுதியில் ஏதும் ரத்தக் கசிவு ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து அவருக்கு தையல் போடப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக கமிலா விக்டோரியன்ஸ் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இடதுபுற தலையில் பந்து வேகமாக தாக்கியதாகவும், சிடி ஸ்கேன் செய்து பார்த்த போது காயத்தின் தன்மை தீவிரமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பந்து தாக்கியதில் மூளைப் பகுதியில் ரத்தக் கசிவு ஏதும் ஏற்படவில்லை என சிடி ஸ்கேனில் தெரியவந்து உள்ளதாகவும் இருப்பினும் அணியின் பிசியோக்கள் முஸ்தபிசுர் ரஹ்மானை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடை முஸ்தபிசு ரஹ்மான் பந்துதாக்கி சுருண்டு விழும் வீடியோ வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20; இலங்கை அணி அபார வெற்றி.. மதீஷா பத்திரனா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்!