சென்னை: 95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் இறுதிப்பேட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே அணி - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) அணியை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டனர். அதில் 7வது நிமிடத்தில் குர்சாஹிப்ஜித் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்து ஆட்டத்தை ரயில்வே அணியின் கோல் கணக்கை துவங்கி வைத்தார். தொடர்ந்து 9வது நிமிடத்தில் சிம்ரன்ஜோத், 18வது நிமிடத்தில் யுவராஜ் வால்மிகி என அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்தனர். இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது ரயில்வே அணி.
பின்னர் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த ஐஓசி அணி, ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. தொடர்ந்து 29வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி குஜிந்தர் சிங் கோல் அடிக்க 3-2 என்ற கணக்கில் ஆட்டம் சுவாரஸ்யமானது.
இதனையடுத்து ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் முகுல் சர்மாவும், 58வது நிமிடத்தில் யுவராஜ் வால்மீகி கோல்களை அடித்து அசத்தினர். இதன் மூலம் 5-2 என்ற வலுவான நிலைக்குச் சென்றது இந்தியன் ரயில்வே அணி. கடைசிவரை போராடிய ஐஓசி அணியால் 3 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ரயில்வே அணி, தொடர்ந்து 2வது முறையாகத் தங்கக் கோப்பை வென்று அசத்தியுள்ளது.
இதையும் படிங்க: Right To Match விதியில் அன்கேப்டு பிளேயராகும் வீரர்கள் யாரார்? பட்டியலில் தமிழக வீரருக்கும் இடம்!
பரிசு தொகை: சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வே அணிக்கு 7.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ரன்னராக இடம் பெற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணிக்கு (ஐஓசி) 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பின்னர் தொடரில் சிறந்து விளங்கிய போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
விருதுகள்:
- ஆட்ட நாயகன் விருதை ரயில்வே அணியின் பிரதிப் சிங்
- மோஸ்ட் பிராமிசிங் பிளேயர் (Most Promising Player) ஒடிசா அணியின் ரஜத் ஆகாஷ் டிர்கி
- பெஸ்ட் ஃபார்வட் ஆஃப் தொடர் ரயில்வே அணியின் யுவராஜ் வால்மீகி
- பெஸ்ட் மிட் பீல்டர் ஆஃப் தொடர் இந்திய ராணுவ அணியின் ஜோபன் ப்ரீத் சிங்
- சிறந்த டிஃபன்டர் ஆஃப் தொடர் ரயில்வே அணியின் ஜோகிந்தர் சிங்
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்