மும்பை : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.14) இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 29வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்த மும்பை அணி, கடைசியாக நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆறுதல் நிலைக்கு திரும்பி உள்ளது. அதேபோல் சென்னை அணியும் தனது கடைசி ஆட்டத்தில் சொந்த மண்ணில் கொல்கத்தாவை வீழ்த்த கையோடு திரும்பி உள்ளது.
சொந்த ஊரில் ஆட்டம் நடப்பதால் மும்பை அணிக்கு சற்று சாதகமான சூழல் நிலவுகிறது. அதேநேரம் சென்னை அணியும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலம் வாய்ந்து காணப்படுகிறது. விளையாட்டில் இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதிக் கொள்வதை எல் கிளாசிகோ என்று அழைப்பது உண்டு. பெரும்பாலும் இந்த சொல் கால்பந்து போட்டியில் பயன்படுத்துவது உண்டு.
தற்போது ஐபிஎல் போட்டியில் இரண்டு பலம் வாய்ந்த அணிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள உள்ள நிலையில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
சென்னை சூப்பர் கிங்ஸ் : ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்.
மும்பை இந்தியன்ஸ் : ரோகித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால்.
இதையும் படிங்க : லக்னோவை ஊதித் தள்ளிய கொல்கத்தா... பிலிப் சால்ட், ஸ்ரேயாஸ் ஐயர் அபார ஆட்டம்! - IPL 2024 KKRvs LSG Match Highlights