லக்னோ: நடப்பு ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங் அணியை எதிர்கொண்டது. லக்னோ ஏகானா மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் 'இம்பாக்ட் பிளேயராக' களமிறக்கப்பட்டார். இதனால், நிக்கோலஸ் பூரன் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதேபோல, தமிழகத்தை சேர்ந்த மணிமாறன் சித்தார்த் இந்த போட்டியில் அறிமுகமானார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய டி காக் 54 ரன்களும், கேப்டன் பூரன் 42 ரன்கள் விளாச இறுதியில் வந்து அதிரடியாக விளையாடிய குருணல் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதனால் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது லக்னோ அணி.
பஞ்சாப் அணியில் தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய பேர்ஸ்டோ - ஷிகர் தவான் ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து 102 ரன்கள் குவித்தனர்.
இதனால் பஞ்சாப் அணி எளிதில் இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து இருந்த பேர்ஸ்டோ, மயங்க் யாதவ் வீசிய பந்தில் ஸ்டோனிஸ் கேட் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு தான் ஆட்டம் சூடி பிடிக்கத் தொடங்கியது.
இதனையடுத்து களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 19 ரன்களுக்கும், ஜிதேஷ் சர்மா 6 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார், மயங்க் யாதவ். இந்த நிலையில், கடைசிவரை அணியின் வெற்றிக்காக போராடிய ஷிகர் தவான் 70 ரன்களுக்கு வெளியேற, ஆட்டத்தின் போக்கு முழுவதுமாக லக்னோ அணிபக்கம் திரும்பியது.
இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. 21 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது, லக்னோ அணி.
லக்னோ அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட 21 வயதான இளம் பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோசின் கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையும் படிங்க: RCB Vs KKR:500வது போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற நரேன்..ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அணி அபார வெற்றி! - KKR Beat RCB