கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாடு முழுவதும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்.21) மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்று பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் குவித்தார். தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான பிலிப் சால்ட் 48 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அரம்பமே அதிரடி காட்டிய விராட் கோலி 2வது ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு பெங்களூரு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இருப்பினும் அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஹர்சித் ரானா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார்.
புல் டாசாக வந்த பந்தை விராட் கோலி அடிக்க அது ஹர்சித் ரானா கையில் சிக்கிக் கொண்டது. இதை நடுவர்கள் நோ பாலாக அறிவிப்பார்கள் என்று எண்ணிய விராட் கோலிக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கள நடுவர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறிது நேரம் ஆடுகளம் பரபரப்புடன் காணப்பட்டது.
விராட் கோலியை தொடர்ந்து கேப்டன் பாப் டு பிளெசிஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் படிதார் இணை களமிறங்கி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தது. அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து கொல்கத்தா அணிக்கு கடும் குடைச்சலை கொடுத்தனர்.
ஒரு வழியாக இந்த இணையை ரஸ்செல் பிரித்தார். அவரது பந்துவீச்சில் வில் ஜேக்ஸ் (55 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ரஜத் படிதரும் 52 ரன்கள் சேர்த்த கையோடு வெளியேறினார். இதன் பின் ஆட்டம் மீண்டும் கொல்கத்தா வசம் சென்றது. கேமரூன் கிரீன் 6 ரன், சுயெஷ் பிரபுதேசாய் 24 ரன், மஹிபால் லம்ரூர் 4 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் அணியின் நம்பிக்கை பாத்திரமான தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி வெற்றிப் பாதைக்கு அணியை அழைத்துச் சென்றார். அவருக்கு உறுதுணையாக கரன் சர்மா விளையாடினார். இறுதியில் இந்த ஜோடியும் பிரிந்தது. கடைசி ஒரு பந்தில் பெங்களூரு வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 ரன் மட்டுமே எடுத்தனர்.
இதனால் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. லாக்கி பெர்குசன் கடைசி பந்தில் ரன் அவுட்டாகி அணிக்கு ஏமாற்றம் அளித்தார்.
இதையும் படிங்க : ஐபிஎல் கிரிக்கெட்டில் 250 சிக்சர்கள் விளாசி விராட் கோலி சாதனை! - IPL 2024 Virat Kohli 250 Sixes