திருவனந்தபுரம்: பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை 2-க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷின் பங்களிப்பு என்பது வியக்கத்தக்கது.
அந்த ஆட்டத்தில் கேபட்ன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இணைந்து சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியில் 18 ஆண்டுகளாக விளையாடி வந்த ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அப்போதும், ஸ்ரீஜேஷ் இந்திய அணியில் அங்கம் வகித்தார். இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்திய ஹாக்கி அணியில் அங்கம் வகித்த கோல் கீப்பர் என்ற சிறப்பை ஸ்ரீஜேஷ் பெற்றார்.
ஓய்வுக்கு பின்னர் இந்திய ஹாக்கி அணியில் இளம் வீரர்களை இணைக்கும் இலக்கை நோக்கி இளைஞர்களுக்கு ஸ்ரீஜேஷ் ஹாக்கி பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில், இந்திய ஹாக்கியில் அவர் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 1 கோடிப்பே... விண்ணை முட்டும் வினேஷ் போகத்தின் பிராண்ட் மதிப்பு! நீரஜ், மனு பாக்கருக்கு எவ்வளவு தெரியுமா? - Vinesh phogat Brand value increase